0 0
Read Time:4 Minute, 22 Second

‘‘எனது இதயம் துடிக்கிறது’’- பிபின் ராவத் மறைவுக்கு ராஜ்நாத் சிங் இரங்கல். மேலும் பல தலைவர்கள் இரங்கல்..

நீலகிரி மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். பிபின் ராவத் மறைவை கேள்வியுற்று எனது இதயம் துடிக்கிறது என அவர் கூறியுள்ளார்.

கோவை சூளூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக இன்று காலை ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர்.

இந்த ஹெலிகாப்டர்தான் குன்னுர் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 5 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

சம்பவ இடத்தில் நீலகிரி கலெக்டர் அம்ரித், எஸ்.பி. ஆசிஸ் ராவத், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணியினை விரைவுப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பின்னர் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ராணுவ அதிகாரிகள் 13 பேர் உயிரிழந்ததாக பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ஓருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.

அவரது அகால மரணம் நமது ராணுவத்துக்கும் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

ஜெனரல் ராவத் நாட்டிற்கு விதிவிலக்கான தைரியத்துடனும் விடாமுயற்சியுடனும் சேவையாற்றினார். முதல் பாதுகாப்புப் படைத் தளபதியாக அவர் நமது ஆயுதப் படைகளின் கூட்டுக்கான திட்டங்களைத் தயாரித்திருந்தார்.

இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை கேள்வியுற்று எனது இதயம் துடிக்கிறது. வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் ஜிபி கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %