0 0
Read Time:3 Minute, 32 Second

கடலூரில் இழுவலைகளை தவறான முறையில் பயன்படுத்தி, கரையோரங்களில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்குத் தடை விதிக்க வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான சிறுதொழில் மீனவர்கள் படகில் கருப்புக்கொடியை கட்டியவாறு சென்று மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மீனவர்களில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு ஒரு தரப்பும், அனுமதிக்கக்கூடாது என ஒரு தரப்பும் பல ஆண்டுகளாகவே போராடி வருகின்றனர். இந்த நிலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட இழுவலைகளையே விசைப்படகு மீனவர்கள் சிலர் தவறாகப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கடலூர் பகுதி சிறுதொழில் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஃபைபர் படகு மீனவர்களும் 500 விசைப்படகு மீனவர்களும் மீன்பிடி தொழிலை நம்பி இருக்கின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் பயன்பாட்டில் இருக்கும் எஸ்.டி.பி., ஐ.பி. வகை விசைப்படகுகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் குதிரைத் திறன் கொண்ட எஞ்சின்களைப் பயன்படுத்தி சிலர் மீன்பிடிக்கின்றனர் என சிறுதொழில் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேபோல் இழுவலைகளின் கண்ணி எனப்படும் கண் பகுதி 40 செண்ட்டி மீட்டர் வரை இருக்க வேண்டும் என அரசு நிர்ணயம் செய்துள்ள நிலையில், சிலர் அதனை 10,15,20 செண்ட்டி மீட்டர் என சுருக்கி மீன்பிடிக்கின்றனர் எனவும் அதனால் மீன்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பெரிய விசைப்படகுகளைக் கொண்டு ஆழ்கடல் சென்று மீன்பிடிக்காமல் கரையோரத்தில் இருந்தவாறு மீன் பிடிப்பதாகவும் குற்றம்சாட்டும் மீனவர்கள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

விதிமீறல்களில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கக் கோரியும் நூற்றுக்கணக்கான ஃபைபர் படகு மீனவர்கள் உப்பனாற்றின் வழியே தங்களது படகுகளில் கருப்புக் கொடியை கட்டியவாறு சென்று மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %