சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் சார்பில், ‘இன்னுயிர் காப்போம் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின் முக்கிய அம்சம், சாலை விபத்தில் படுகாயம் அடைபவர்களுக்கு 48 மணி நேரத்துக்கு கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிப்பதாகும். இத்திட்ட துவக்க விழாவுக்கு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். முன்னதாக, மாவட்ட எல்லையான மாமண்டூரில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
மதுராந்தகம் நகர செயலாளர் குமார் தலைமையில் அம்பேத்கர் சிலை அருகிலும், தாலுகா அலுவலகம் அருகே லத்தூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பாபு, மதுராந்தகம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பொன்.சிவகுமார், சிலாவட்டம் பகுதியில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சத்தியசாய், ஒழுப்பாக்கம் பகுதியில் லத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன், சிறுநாகலூர் கிராமத்தில் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தம்பு, சோத்துப்பாக்கத்தில் சித்தாமூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏழுமலை, சிற்றரசு தலைமையில் கரகாட்டம், மேளதாளம், செண்டை மேளம், நாதஸ்வரம் ஆகியவற்றுடன் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சிக்காக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி கொடி கம்பங்களும் தோரணங்களும் கட்டப்பட்டு உள்ளன. மேலும், ஆதிபராசக்தி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக, அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் செய்து வருகிறார். இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
Source: Dinak