0 0
Read Time:3 Minute, 13 Second

சென்னை கொளத்தூரில் உள்ள அவ்வை நகரில் தங்கள் இருப்பிடத்தை இழந்து வீதியில் நிற்கும் இந்த பூர்வகுடிமக்களுக்கு உரிய நியாயம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கை விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொளத்தூர் அவ்வை நகரில் உள்ள வீடுகளில், 50 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 3 தலைமுறையாக அங்கு மக்கள் குடியிருந்து வந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். இதுநாள் வரை அரசாங்கத்திற்கு முறையாக வீட்டுவரி, தண்ணீர் வரி, மின்சாரம் பயன்பாட்டுக்கு கட்டணம் செலுத்தியும் வந்துள்ளார்கள்.

அதேபோன்று குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நாட்டில் ஒரு குடிமகனுக்கு தேவையான அனைத்தையும் தங்கள் வீட்டு முகவரியில் பெற்று பயன்படுத்தி வந்துள்ளனர்.

மேலும் அங்கு உள்ள மாணவர்கள், மாணவிகள் அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வந்துள்ளனர். இனி அதே பள்ளிகளில் தங்கள் படிப்பை எவ்வாறு அவர்கள் தொடர முடியும் என்று செய்வதறியாது நிற்கின்றனர். அதேபோன்று, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பதற்குக் கூட இடம் இல்லாமல் தவிப்பதாக கூறுகின்றனர்.

மேலும், குடியிருப்புக்கு அருகாமையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு, இதுநாள் வரை தங்கள் வாழ்க்கையை நடத்தியவர்கள் இனிமேல் எங்கு போய், என்ன தொழில் செய்வது என்று தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து விழி பிதுங்கி வீதியில் நிர்கதியாய் இருக்கிறார்கள். இதைப்பற்றியெல்லாம் எதையும் யோசிக்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று தமிழக அரசு திடீரென்று அங்கு உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளையெல்லாம் இடித்து தள்ளி இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.

சென்னை, கொளத்தூரில் உள்ள அவ்வை நகரில் தங்கள் இருப்பிடத்தை இழந்து வீதியில் நிற்கும் இந்த பூர்வகுடிமக்களுக்கு உரிய நியாயம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %