கடலூர் மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாகனங்களில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதுடன், நான்கு பேருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட வாரியாக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்பாக பிரிக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 22, 23-ம் தேதிகளில் தேர்தல் நடக்கும் என்று தகவல் வெளியானது. கடலூர், பண்ருட்டி என இரண்டு தொகுதிகளை கொண்ட வடக்கு மாவட்ட அதிமுக-வில் கடலூர் நகர செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர் ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில் புதிய பொறுப்பாளர்ள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
அதேபோல பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் நீக்கப்பட்ட நிலையில், அந்த பதவிகளை பெறுவதில் கட்சிக்காரர்களுக்கு இடையே கோஷ்டிப் பூசல் நிலவி வந்தது. இந்நிலையில்தான் நேற்று பாதிரிகுப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் உட்கட்சித் தேர்தலுக்காக மனு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது கடலூர் நகர துணை செயலாளரான கந்தன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், “அனைத்து வார்டுகளுக்கும் புதிய விண்ணப்பம் வழங்க வேண்டும். புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். பழைய ஆட்களுக்கு வழங்கக்கூடாது” என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியான குமார் என்ற சேவல் குமாரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனார். தொடர்ந்து இருதரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எம்.சி. சம்பத் அவர்களை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ஆனால் அதன்பிறகும் இருதரப்பினரும் சமாதானம் அடையாமல் கட்சி அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாற இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக கடலூர் – திருவந்திபுரம் சாலையிலும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அங்கிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனால் அந்த வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். அதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது
இந்த கோஷ்டி மோதலில் நகர துணைச் செயலாளர் கந்தன் மற்றும் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியான சேவல் குமார் தரப்பைச் சேர்ந்த ஆறுமுகம், ராதாகிருஷ்ணன், பாலாஜி உள்ளிட்டவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இரு தரப்பு மோதலை தொடர்ந்து டி.எஸ்.பி கரிகால் சங்கர் மற்றும், டி.எஸ்.பி யாஸ்மின் தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் கட்சி அலுவலக வளாகம் மற்றும் கடலூரில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நகர துணை செயலாளர் கந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் பாலாஜி, வசந்த், முன்னாள் கவுன்சிலர் மணி உள்ளிட்ட 4 பேர் மீதும், படுகாயமடைந்த மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர துணை செயலாளர் கந்தன் மற்றும் அவரின் தரப்பை சேர்ந்த பிரகாஷ், வடிவேல், சக்திவேல், கமர், மணிகண்டன், காந்தி உள்ளிட்ட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நகர துணை செயலாளர் கந்தன் தரப்பைச் சேர்ந்த பிரகாஷ், வடிவேல், மணிகண்டன், மற்றொரு பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். இந்த கோஷ்டி மோதலைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
Source:விகடன்