0 0
Read Time:3 Minute, 29 Second

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அறுவடைக்கு தயார் நிலையில் கரும்புகள்

தமிழர் திருநாட்களில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. இந்த பண்டிகையில் மிக முக்கிய அங்கமாக விளங்குவது கரும்பு ஆகும். மருத்துவ குணங்கள் வாய்ந்த கரும்புகள் சிறுவர்களால் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய பொருளாகவும் விளங்குகிறது. கால்சியம் சத்து, எலும்பு வளர்ச்சி, பற்கள் உறுதித்தன்மை ஏற்படுத்துதல், வயிற்று கோளாறு உள்ளிட்டவைகளுக்கு அருமருந்தாக கரும்பு விளங்குகிறது. இத்தகைய கரும்புகள் விதைப்பு செய்த பத்து மாதங்களில் அறுவடைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீர்காழி அருகே செம்பதனிருப்பு, ராதாநல்லூர், நடராஜபிள்ளை சாவடி, அல்லி விளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 350 ஏக்கரில் விவசாயிகள் கரும்பை பயிரிட்டுள்ளனர். மேலும் குத்தாலம் வானாதி ராஜபுரம் பகுதியில் 90 ஏக்கர் விளைநிலத்தில் கரும்புகள் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது மேற்கண்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி கரும்புகளை அறுவடை செய்ய விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

நடவடிக்கை எடுப்பார்களா?

தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்களை தொகுப்பாக வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த தொகுப்பில் கரும்பும் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு அப்போதைய தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக, ஒரு கரும்பு ரூ.15-க்கு கொள்முதல் செய்தது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு விலை கட்டுப்படியானது.

ஆனால் இந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிகிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் மூலம் வியாபாரிகள் கரும்பு விலையை குறைத்து முன்பணம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக விவசாயிகளிடம் நேரடியாக கரும்பை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %