மயிலாடுதுறையில் 4 மாவட்டங்களுக்கான தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல மையத்தை துணைவேந்தர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்.
பல்கலைக்கழக மண்டல மையம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் பார்த்தசாரதி தலைமை தாங்கி மண்டல மையத்தை திறந்து வைத்து, மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டப் பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் மயிலாடுதுறை, திருவண்ணாமலை, சிவகங்கை, சேலம் ஆகிய ஊர்களில் 4 புதிய மண்டல மையம் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஏற்கனவே தமிழ்நாட்டில் 8 மண்டல மையங்கள் உள்ளன. தற்போது 9-வது மண்டல மையம் மயிலாடுதுறையில் தொடங்கப்பட்டுள்ளது. இது மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய 4 மாவட்டங்களுக்கான மண்டல மையம் ஆகும்.
81 வகையான பட்டப்படிப்பு:
பள்ளிகளில் படித்துவிட்டு கல்லூரிகளில் படிக்க வாய்ப்பை இழந்தவர்கள் இங்கு சேர்ந்து பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு படிக்கலாம். மேலும் கல்லூரியில் படித்தவர்கள் மேல் படிப்பை இங்கே தொடரலாம். இங்கு 81 வகையான பட்டய, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் உள்ளன. இங்கு பயின்றவர்கள் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு பெற்று பணியாற்றலாம். மேலும் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் இங்கு சேர்ந்து படிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மண்டல மைய இயக்குனர் வினோத்குமார் வரவேற்று பேசினார். இதில் தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அறிவுடைநம்பி, விரிவாக்க கல்விப்புல தலைவர் தியாகராஜன், உள்தர உறுதிப்பாட்டு மைய இணை இயக்குனர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாணவர் உதவி மற்றும் சேவை பிரிவு இணை இயக்குனர் சரவணகுமார் நன்றி கூறினார்.
Source: Thandi