நாகையில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை திருடி விற்ற போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார்.
நாகையில், சாராய குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காடம்பாடியில் உள்ள பழைய ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.
இதுகுறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் ஏட்டு செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ்காரர் பணியிடை நீக்கம்:
விசாரணையில், ஆயுதப்படை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வெளிப்பாளையம் போலீஸ் நிலைய போலீஸ்காரர் முருகன்(35) என்பவர், மோட்டார் சைக்கிள்களை திருடி ராஜ்குமாரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், முருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில் போலீஸ்காரர் முருகன் தலைமறைவாகி விட்டார். தலைமறைவாக உள்ள போலீஸ்கார் முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக நாகையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரே மோட்டார் சைக்கிள்களை திருடி விற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ்காரர் முருகன், மதுரை ரேஸ்கோர்ஸ் காலனியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.