0 0
Read Time:4 Minute, 30 Second

கடலூர் மாநகராட்சியில் குப்பை சேகரிக்க பயன்படுத்தும் பேட்டரி வாகனங்கள் வீணாகி குப்பையில் போடப்பட்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் நகராட்சி சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சேகரித்து, பின்னர் டிராக்டர்கள் மூலம் ஏற்றப்பட்டு குப்பை கிடங்குகளில் கொட்டப்படும்.

தற்போது கம்மியம்பேட்டை, பச்சையாங்குப்பம் குப்பை கிடங்குகள் மூடப்பட்டதால், வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

ஏற்கனவே பாதிரிக்குப்பம் பகுதியில் குப்பை கிடங்கிற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், எந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைப்பது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இருப்பினும் வேறு வழியின்றி குப்பைகளை கெடிலம் ஆற்றில் ஆங்காங்கே கொட்டி வருகின்றனர்.

பேட்டரி வாகனங்கள் வீணாகும் நிலை

இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகவே கெடிலம் ஆற்றில் குப்பைகளை கொட்டக் கூடாது என்று அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் வேறு வழியின்றி அங்கேயே குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் குப்பைகளை வீடு, வீடாக சென்று சேகரிப்பதற்காக 96 தள்ளுவண்டிகள் உள்ளன. இது தவிர கடந்த 2018-2019-ம் ஆண்டு குறுகிய தெருக்களில் சென்று குப்பைகளை சேகரிக்க 55 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன. அந்த பேட்டரி வாகனங்களை சரிவர பயன்படுத்தாமல் வீணாகியது. சில வாகனங்கள் பழுதாகி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அப்படியே நிற்கின்றன.

தள்ளுவண்டி

அதில் செடி, கொடிகள் படர்ந்து இருக்கும் நிலை உருவாகி உள்ளது. கிட்டத்தட்ட குப்பை அள்ளுவதற்காக வாங்கிய வாகனங்கள் பயன்பாடு ஏதும் இல்லாமலே குப்பைக்கு சென்றுவிட்டது என்று பார்ப்பவர்கள் வேதனையுடன் கூறி செல்கிறார்கள்.

இதை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. இதற்கிடையில் சைக்கிளில் சென்று தூய்மை பணியாளர் ஒருவர் குப்பைகளை சேகரிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இது பற்றி நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதியிடம் கேட்ட போது, அந்த புகைப்படத்தில் உள்ள நபர் உடல் நலம் கருதி விருப்பப்பட்டு சைக்கிளில் சென்று குப்பை சேகரிப்பதாக தெரிவித்தார். ஆனால் அப்படி செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவர் தள்ளுவண்டியின் தான் குப்பைகளை சேகரிக்கிறார். அந்த படம் பழைய படம்.

மேலும் 55 பேட்டரி வாகனங்களில் 10 வாகனங்கள் இயங்கி வருகிறது. 25 வாகனங்களை சரி செய்ய இருக்கிறோம். மற்ற வாகனங்களும் விரைவில் சீரமைக்கப்பட்டு, குப்பைகள் சேகரிக்க பயன்படுத்தப்படும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %