நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி இரா.நெடுஞ்செழியனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு சார்பில் சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் இரா.நெடுஞ்செழியனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவையையொட்டி அவரது சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால் அதற்கான தொகையை அவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து நெடுஞ்செழியனின் நினைவு தொகுப்பு புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நெடுஞ்செழியனின் மகன் விஸ்வநாதன், தனது தந்தையின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் சிலை திறந்து முதலமைச்சர் மரியாதை செய்ததற்கும், அவர் எழுதிய புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கும் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் விளையாட்டு துறை மேம்படுத்தி வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.