கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். விவசாயி. இவர், தனக்கு சொந்தமான இடத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் விஸ்வநாதன் கோழிப்பண்ணைக்கு சென்றார். அப்போது அங்கு கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், அந்த பகுதியை சோந்தவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
4 ஆயிரம் கோழிகள் செத்தன:
இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துச்செல்வம் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் 4 ஆயிரம் கோழிகள் செத்தன. மேலும் கோழிப்பண்ணையில் வைத்திருந்த தீவனங்கள், பொருட்கள் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பலானது. இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்துக்கும் மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
காரணம் என்ன?
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் கோழிப்பண்ணைக்கு சென்று பார்வையிட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததா? அல்லது யாரேனும் கோழிப்பண்ணைக்கு தீ வைத்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.