கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
வாகனங்கள் பறிமுதல்
2022-ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான தேவனாம்பட்டினம் சில்வர் பீச், பிச்சாவரம், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனங்களில் சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். ஆகவே புத்தாண்டை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் பொதுமக்கள் கொண்டாடுங்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.