தமிழ்நாட்டில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்புக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், அதிகாலையிலிருந்து மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில், 162 மோட்டார் பம்புகளை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மண்டல வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அளிக்கும் புகார்கள் அடிப்படையில் தேவையுள்ள இடங்களுக்கு மோட்டார் பம்புகள் அனுப்ப நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.