சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒமைக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மெரினா உட்பட சென்னை கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தொற்று வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒமைக்ரான் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. அதன் காரணமாக தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உட்பட சென்னை கடற்கரைகளில் இன்று (02.02.22) முதல் மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக மறுஉத்தரவு வரும் வரை கடற்கரையின் மணற்பரப்பில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட உள்ளதாகவும், பிரத்யேக நடைபாதையில் மட்டும் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் பரப்பில் நடைபயிற்சி செய்ய அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கரோனா ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.