தமிழக கடற்கரையில் சுமார் 5.5 கி.மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூரில் நேற்று முன்தினம் காலையில் மழை பெய்த நிலையில், மாலையில் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு காலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதில் அவ்வப்போது பலத்த மழையாகவும் கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பின்னர் நேற்று பகலில் இடையிடையே மழை தூறியது.
இதேபோல் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, அண்ணாமலைநகர், குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 68 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக லக்கூரில் 7.3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
கரும்புகளை சூழ்ந்தது
இதற்கிடையே கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சிதம்பரம் தாலுகாவிற்கு உட்பட்ட சிவபுரி, பெராம்பட்டு மடத்தான்தோப்பு, வேளக்குடி, பழையநல்லூர், எருக்கன்காட்டு படுகை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இதேபோல் வேளக்குடி, அகரநல்லூர் பழையநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் விளைநிலத்தில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருப்பதால், மழைநீரை முழுமையாக வடிய வைக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் கரும்புகளை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்று கவலை அடைந்துள்ளனர்.
திட்டக்குடி
திட்டக்குடி பகுதியில் பெய்த மழை காரணமாக செவ்வேரி பஸ் நிறுத்தம் அருகே இருந்த 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.
கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை.