பொதுத்தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனிடையே கடந்தாண்டு கொரோனா தொற்று எண்ணிகை படிப்படியாக குறையத் தொடங்கியதையடுத்து, நேரடி வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டது. இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வியாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், பொதுத்தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தது பின்வருமாறு,
10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்கள் தங்களுக்கு தேர்வு எழுத உதவியாளர் உள்ளிட்ட ஏதேனும் சலுகைகள் தேவைப்படின் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். நோயின் தன்மை, எந்த மாதிரியான சலுகைகள் தேவைப்படும் என்று உரிய மருத்துவச் சான்றுடன் மாற்றுத் திறன் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று அதை வரும் 13-ம் தேதிக்குள் முதன்மைக்கல்வி அலுவலர்களிடம், தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்.