நெல்லிக்குப்பம், வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, சோழவள்ளி, கீழ்பாதி, மேல்பாதி, நத்தம், அண்ணாகிராமம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். தற்போது அந்த பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு பெய்த தொடர்மழையால் நெல்லிக்குப்பம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் சுமார் 400 ஏக்கரில் மழைநீர் தேங்கியது. இதனால் நெற்பயிர்கள் சாய்ந்து அழுகி நாசமானது.
விவசாயிகள் கண்ணீர்
இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் வடித்து வருகிறார்கள். இதுகுறித்து நடுவீரப்பட்டை சேர்ந்த விவசாயி கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் சம்பா நடவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நெல்லிக்குப்பம், அண்ணாகிராமம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன.. வடகிழக்கு பருவமழையின்போது மிகுந்த கவனத்துடன் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து நெற்பயிர்களை காப்பாற்றி வந்தோம். அதனால் தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து வீணாகியுள்ளது. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் செலவழித்து நிலையில், மூன்று மாதத்திற்கு மேலாக கண் இமைபோல் காத்திருந்த பயிர்கள் முழுவதும் நாசமாகியுள்ளதால் எங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆகவே தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட என்னை போன்ற விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கினால் மட்டுமே? எங்களது குடும்பத்தை காப்பாற்ற முடியும் என கவலையுடன் தெரிவித்தார்.
சிதம்பரம்
சிதம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு பெய்த தொடர்மழையால் கூடுவெளிச்சாவடி, துரைப்பாடி, துணிசிரமேடு, மண்டபம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி நாசமானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மழையால் சேதமடைந்த நெல் வயல்ககளை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என எதிர்ப்பார்த்துள்ளனர்.
Source:Thanthi