அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் உரங்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உர விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உரம் இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும். அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உரம் விற்பனை செய்யும் போது இயற்கை உரங்கள், வளர்ச்சி ஊக்கிகள், உயிர் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது.
உர உரிமத்தில் அனுமதி வழங்கிய இடத்தில் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். உர உரிமம் பார்வையில் படும் படி வைக்க வேண்டும். இருப்பு வைக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட உரக்கிடங்குகளில் உர உரிமத்தின் நகல் வைக்க வேண்டும். சில்லரை விற்பனையை விற்பனை முனைய எந்திரம் மூலம் மட்டுமே மேற்கொண்டு ரசீது வழங்க வேண்டும்.
நடவடிக்கை
விற்பனை முனைய எந்திர ரசீது கொண்டு புத்தக இருப்பினை நேர் செய்ய வேண்டும். விவசாயிகளின் நில உடைமை பரப்பிற்கு மட்டுமே உரங்கள் விற்பனை செய்ய வேண்டும்.
மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை இரண்டிற்கும் தனித்தனியாக இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும். ஒரு வகை உரத்தினை ஒரு மூட்டைக்கு மேல் திறந்து வைத்திருக்கக்கூடாது.
உரம் எடைபோடும் தராசு, முத்திரை இடப்பட்டு நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும்.‘ சில்லரை உரிமம் பெற்றவர்கள் மொத்த விற்பனை ஏதும் செய்யக்கூடாது. இந்த விதிமுறைகளைக் கடைபிடிக்காத உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.