கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக் கையைக் காட்டிலும் இழப்பீட்டுத் தொகை கூடுதல் எண்ணிக்கையில் விநியோகிக்கப்படுகிறது என்றும், இதில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா 2-வது அலையில் தமிழகத்தில் சுமார் 36,700 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட் டத்தில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 876 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்தது. இத்தொகையை வழங்குவதற்காக உயிரிழந்தவர்களின் குடும்பத் தினரிடமிருந்து அதற்கான விண்ணப்பங்கள் இணையம் மற்றும் நேரடியாக அரசால் பெறப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கடலூர் மாவட்டத்தில் டிச.31 வரை 1,792 பேர் விண்ணப்பித்து இருப்ப தாகவும், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில் 1,390 விண்ணப்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியிருப்பதோடு, 13 விண்ணப்பங்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவை என்பதால் அந்தந்த மாவட்டங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெறப்பட்டவைகளில் 27 மனுக்களில் வாரிசு மற்றும் சட்டப்பிரச்சினை உள்ளதால் இழப்பீடு வழங்க இயலவில்லை, 66 மனுக்களில் முழுமையான முகவரி இல்லை, 20 மனுக்களில் தொலைபேசி எண் மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்கள் இல்லை, இதனால் இந்த மனுக்களை பரிசீலனை செய்ய இயலவில்லை என்றும், மேலும் 113 விண்ணப்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டி உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 876 என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 1,792 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதும், அதில் 1,390 பேருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.6.95 கோடி வழங்கப்பட்டிருப்பதாக கூறுவதும் இதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கடலூர் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபுவிடம் கேட்டபோது, “கரோனா தொற்றுக் கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் பட்டியல் தான் அன்றாடம் வெளியிடப்படும். சிலருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியாது, ஆனால், ஸ்கேன் செய்து பார்க்கும் போது தொற்று இருப்பது தெரிய வந்திருக்கும், அவ்வாறு பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் கணக்கு முதலில் தெரிய வராது. அவர்கள் தற்போது உரிய மருத்துவச் சான்றுடன் விண்ணப்பித்திருக்கலாம். ஆனாலும் இழப்பீட்டுத் தொகை விநியோகிக்கும் பணியை வருவாய் துறையினர் தான் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்குத் தான் இதுபற்றிய முழு விவரம் தெரிய வரும்“ என்றார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம்(பொது) கேட்டபோது, “கணக்கீடுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது உண்மை தான். அதை சரிசெய்து வருகிறோம். உதாரணத்திற்கு ஒரே குடும்பத்தில் இறந்தவருக்கு 4 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதனால் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை கூடியிருப்பதோடு, விநியோகித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து போல் காணப் படுகிறது. அதை சரிசெய்து வருகிறோம்” என்றார். ‘அப்படியானால் விநியோகிக்கப்பட்ட தொகையிலும் மாறுபாடு ஏற்படுமே! என்றதற்கு அதையும் ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Source:Hindu