குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி. தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓ.என்.ஜி.சி. பணிகள்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவேள்விக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. பழைய எண்ணெய் கிணறு உள்ளது. இந்த எண்ணெய் கிணறு 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் அமைக்கப்பட்டது.
இங்கு குத்தாலம் எரிவாயு சேமிப்பு மையத்தில் இருந்து கடந்த 10 நாட்களாக தளவாட பொருட்களை லாரிகளில் ஏற்றி வந்து 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆழ்துளை போடும் கருவிகள் மூலம் பணிகள் நடந்து வருவதாகவும், இந்த பணியால் இரவில் அதிக அளவில் சத்தம் ஏற்படுவதாகவும், இதன் மூலம் இந்த பகுதியில் புதிதாக ஒரு எண்ணெய்க்கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முயற்சிப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
லாரியை மறித்து போராட்டம்:
இந்த நிலையில் நேற்று திருவேள்விக்குடி மெயின் ரோட்டில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் திரண்டனர்.
குத்தாலம் எரிவாயு சேமிப்பு மையத்தில் இருந்து தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில் எண்ணெய் கிணறுகளில் பராமரிப்பு பணி என்ற பெயரில் புதிய எண்ணெய்க்கிணறு அமைக்க முயற்சிப்பதாக கூறி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.
2 மணி நேரம் நடந்தது:
இந்த போராட்டம் குறித்த தகவல் அறிந்ததும் குத்தாலம் தாசில்தார் பிரான்சுவா மற்றும் குத்தாலம் போலீசார் ஓ.என்.ஜி.சி. பாதுகாப்பு ஆய்வாளர் பத்மநாதன் ஆகியோர் தளவாட பொருட்களை ஏற்றிவந்த லாரியை திருப்பி அனுப்பி விட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் 2 மணி நேரம் நடந்தது.