நூற்றாண்டுகளை கடந்த, பழமை மிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் துவக்க காலத்தில் பல விரைவு ரயில்கள் நின்று சென்றன. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சென்னை, திருச்சி, விழுப்புரம், திருவனந்தபுரம், கொழும்பு (இலங்கை) உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று சென்றன. அகலப் பாதையாக மாற்றப்பட்ட பிறகு பயணிகள் ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை மட்டும் செல்லும் ரயில்கள் ஆறு பயணிகள் ரயில்கள், மேலதிகமாக பெங்களுர் – காரைக்கால் செல்லும் இரண்டு பயணிகள் ரயில்கள் என மொத்தம் எட்டு ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று செல்கின்றன. பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில் ஒன்றுகூட இங்கு நின்று செல்வதில்லை.
பயணிகள் ரயில்கள் மூலமாகவே மட்டும் ஆண்டுக்கு பதினொரு இலட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை இந்த ரயில் நிலையம் ஈட்டுகிறது. விரைவு ரயில்கள் நின்று சென்றால் திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருமான ஈட்டுகின்ற முன்னனி ரயில் நிலையமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
ஆகவே, தற்போது பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் தினசரி விரைவு ரயில்களில் சென்னை, மதுரை, திருப்பதி விரைவு வண்டிகள் உள்ளிட்ட சில ரயில்களை பரங்கிப்பேட்டை நிறுத்தத்தில் நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் இந்திய ரயில்வே அமைச்சகம். அது ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட ஊர் / கிராம மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.