வீதிகளில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர், குப்பைகளை அகற்றக்கோரி, மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சி குழுவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கழிவுநீரையும், குப்பைகளையும் அகற்றக் கோரி மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சி குழுவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து, சாலையில் பள்ளம் ஏற்பட்டு சரி செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளால், வியாபாரிகள் தெரு ஆரம்ப சுகாதார நிலையம், ராஜன் தோட்டம் சாலை, மதனா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழிவுநீர் தேங்கி குளம்போல் நிற்கிறது.
இதனால் அதிகளவில் துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் நகரில் விஐபி நகர் ரயில்வே லைன், திம்மநாயக்கன் சுடுகாடு, திருவாரூர் ரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நகரில் பல்வேறு வீதிகளில் தேங்கிநிற்கும் கழிவுநீரை அகற்ற கோரியும் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரியும் மாவட்ட வளர்ச்சி குழுவினர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழுவின் தலைவர் பேராசிரியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு கழிவு நீரையும் குப்பைகளையும் உடனடியாக அகற்றக்கோரி கண்டன முழக்கமிட்டனர்.
செய்தி: தமிழன்,மயிலை