கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
ஆனால் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பெரும்பாலானோர் கடைபிடிக்க வில்லை. இதன் காரணமாக நேற்று முன்தினம் 68 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நோய் பரவல் வேகமெடுத்து நேற்று ஒரே நாளில் 162 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை
இவர்களில் சென்னையில் இருந்து புவனகிரி வந்த ஒருவருக்கும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 43 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 118 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இது வரை மாவட்டத்தில் 64 ஆயிரத்து 975 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் வரை 63 ஆயிரத்து 737 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். நேற்று 24 பேர் குண மடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரை கொரோனாவுக்கு 876 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்த 283 பேர் கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும், 55 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.