கடலூர் துறைமுகம் அருகே உள்ளது ராசாப்பேட்டை மீனவ கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சுமார் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் உருளை வடிவில் ஒரு மர்ம பொருள் மிதந்து வருவதை மீனவர்கள் பார்த்தனர். இதையடுத்து படகில் அதன் அருகே சென்று பார்த்த போது, அது தகரத்தால் ஆன உருளை என்பதும், சுமார் 10 அடி நீளம் கொண்டதாகவும் இருந்தது.
கரைக்கு இழுத்து வந்தனர்
இதையடுத்து மீனவர்கள் உருளையின் ஒரு பகுதியில் கயிற்றை கட்டி, கரைக்கு இழுத்து வந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் கடலூர் துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த உருளையை கைப்பற்றி கடலூர் சுங்க இலாகா அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
எதற்கு பயன்படும் பொருள்?
இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது, கடலில் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் போது, அதன் அருகே படகுகள் ஏதேனும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில், கப்பலை சுற்றிலும் இதுபோன்ற இரும்பு உருளை போடப்பட்டு இருக்கும். அதுதான் தற்போது கடலில் மிதந்து வந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
ஆனால், வழக்காக ரப்பர் வடிவிலான பொருட்கள் தான் இதை போன்று கப்பல்களை சுற்றிலும் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் கப்பலில் பழுது பார்ப்பது உள்ளிட்ட ஏதேனும் ஒரு பணிகள் நடந்தால் தான் இதுபோன்று ரப்பர் விடிவலான உருளை பொருட்கள் பயன்படுத்தப்படும். ஆனால் அதுபோன்று கப்பல்கள் பழுது பார்க்கும் பணி நடந்ததாக இதுவரையில் தெரியவில்லை என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
பரபரப்பு
இதன் மூலம் கடலில் மிதந்து வந்த உருளை பொருள் குறித்த விவரம் மர்மமாகவே இருந்து வருகிறது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Source:Thanthi