கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் கொரோனா சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் என சுமார் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தாமரை இல்லம், ஏ.ஆர்.எம். விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இது அங்குள்ள மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக மருத்துவக் கல்லூரிக்கு இன்று(புதன்கிழமை) முதல் 23-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தும் மையங்கள்
இதற்கிடையே கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி விடுதிகளான டைமண்ட் ஜூபிலி, கோல்டன் ஜூபிலி, திருவாங்கூர் ஆகிய விடுதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது.
தற்போது டைமண்ட் ஜூபிலி விடுதி மட்டும் வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் உள்ள 66 அறைகளில் தலா ஒரு அறையில் மூன்று பேர் தங்கும் வகையில் 3 படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கூடுதல் கலெக்டர் ஆய்வு
இந்த பணிகளை நேற்று காலை கடலூர் கூடுதல் கலெக்டரும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான ரஞ்சித்சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் ஆனந்த், மாவட்ட தொற்றா நோய் தடுப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் லாவண்யா, சிவக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மங்கையர்க்கரசி, கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.