ஆன்லைன் பதிவு செய்வதிலுள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கி, ஆற்றுமணல் நியாய விலையில் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை!.
தமிழகம் முழுவதும் புதிதாக வீடு கட்டுவோர் மற்றும் அரசு,தனியார் கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு புத்தாண்டு பொங்கல் நற்செய்தியாக சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்று மணல் தமிழக அரசு நேரடியாக பொதுப்பணித்துறையின் வாயிலாக விற்பனை செய்யும் என்னும் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்கள். ஒரு யூனிட் 1000 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டு ஆன்லைன் வாயிலாக அதனைப் பதிவு செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பதிவில் பழைய நடைமுறையிலுள்ள நிபந்தனைகளை தளர்த்திட வேண்டும். சாதாரண ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மணல் ஏற்றுகின்ற லாரிகளுக்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கக் கூடாது. யார் வேண்டுமானாலும் எந்த லாரியை வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என்னும் நிலையையோ அல்லது அரசு சார்பிலேயே லாரிகளுக்கு நியாயமான வாடகையை நிர்ணயித்து அதனையும் சேர்த்து பதிவு செய்யும்பொழுது, அக்கட்டணத்தை செலுத்தி நேரடியாக பயனாளிகளின் இல்லத்திற்கே மணல் வந்து சேருகின்ற வகையில் இத்திட்டத்தை நெறிமுறைப்படுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திட வேண்டும்.
அவ்வாறு செய்கின்ற பொழுது தான் முதல்வரின் நல்ல நோக்கத்திற்கு ஏற்ப குறைந்த விலையில் கட்டிடம் கட்டுகின்றவர்களின் இடத்திற்கு மணல் வந்து சேரும். இல்லையேல் 3 யூனிட் ஆற்றுமணல் வாங்குவதற்கு அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தொகை 3000, லாரி வாடகை மற்றும் ஏற்று, இறக்கு கூலி ஆகியன சேர்ந்து சுமார் 10000 என்பதற்கு பதிலாக, மணல் குவாரிகளில் கொடுக்கும் பல மடங்கு லஞ்சம், லாரி வாடகை களில் இரண்டு மடங்கு அதிகரிப்பு, ஏற்று இறக்கு பொக்லைன் கூலி என உயர்ந்து பயனாளிக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு வந்து சேரும் அவல நிலையே மீண்டும் ஏற்படும்.
மணல் மாஃபியாக்களுக்கு கொண்டாட்டமாக அமையும். ஆகவே அரசின் சார்பில் சரியான கட்டணத்தில் வாடகை லாரிகளை நியமித்து, உரிய முழுத் தொகையையும் ஆன்லைன் வாயிலாகவே பணத்தையும் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் மணலை பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்தித்தால் மட்டுமே நிச்சயமாக இதைவிட மகிழ்ச்சியான பொங்கல் பரிசு வேறொன்றும் இருக்க முடியாது என்பது நிதர்சனம். இயற்கை கொடுத்த வளமான மண் வளத்தை நம் தமிழ் மக்கள் பயன்படுத்திட வழிவகுப்போம்.