நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஒரு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நிலையாகும். தற்போது ஏராளமான மக்கள் இப்பிரச்சனையால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்து வர வேண்டிய கட்டாயம் உள்ளது. உலகில் பெரும்பாலான இளம் வயதினர் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, உடலில் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, கர்ப்ப கால நீரிழிவால் சிரமப்படுகின்றனர்.
இதன்காரணமாக, பலர் தங்களது உடல்நலத்தின் மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். உடல் நலப்பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வைத்தியங்களை நாடுகின்றனர். மேலும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்ற முயற்சிக்கின்றனர். அதில், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஏதேனும் ஒரு ஜூஸைக் குடிப்பது மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. இக்கட்டுரையில், சர்க்கரை நோயாளிகள் அல்லது சர்க்கரை வராமல் தடுக்க காலையில் எந்தெந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
வேப்பிலை ஜூஸ்
வேப்பிலை ஜூஸ் அருந்துவது உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று தான். ஆனால், வேப்பிலை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கலாம். முக்கியமாக இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற அற்புதமான ஓர் ஜூஸ்.
பாகற்காய் ஜூஸ் உங்களுக்கு நன்றாக பசி எடுப்பதற்கும், உங்கள் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்கும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடியுங்கள். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.
கற்றாழை ஜூஸ் கற்றாழை சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுவதில்லை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தான் பயன்படுகிறது. குறிப்பாக கற்றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறையவும் உதவும். இதனால், உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு குறைவு.
சுரைக்காய் ஜூஸ் உங்களுக்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருக்கிறதா? அப்படியெனில் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படும். மேலும், இதிலுள்ள சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நிர்வகிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சுரைக்காய் மிகவும் நல்லது.
அருகம்புல் ஜூஸ் அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும்.
பீட்ரூட் ஜூஸ் பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும். மேலும், இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்கும்.