மயிலாடுதுறை அருகே ரேஷன் கடையில் தரமற்ற பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டதை கண்டித்தும், பொங்கல் பரிசு வாங்காதவர்களுக்கும் வாங்கி விட்டதாக குறுஞ்செய்தி செல்போனில் வந்ததாலும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருவாலங்காடு ஊராட்சிக்குட்பட்ட ரேஷன் அங்காடியில் பொங்கல் பரிசுப் பொருள்கள் பெறாமல் இருந்த நபர்களுக்கு இன்று வழங்கப்பட்டன. வண்டுகள் மொய்க்கும் அரிசி, உருகிப் போன வெல்லம் என தரமற்ற பொருள்கள் ரேஷன் கடையில் வழங்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், பொங்கல் பரிசு வாங்காத பொதுமக்களின் செல்போன்களுக்கு அவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொண்டதாக குறுந்தகவல் வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரேஷன் அங்காடியிலுள்ள அலுவலர்களிடம் காண்பித்து கேட்டதற்கு, அவர்கள் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, முறைகேடு மற்றும் தரமற்ற பொருள்கள் விநியோகத்தை கண்டித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமற்ற பொருள்களை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்வதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.