கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர்கள்ளச் சந்தையர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர்.
கடலூர் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு போலீஸார் கடந்த மாதம் 26-ம் தேதி வேப்பூர் வட்டம் மாங்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த லாரியை மறித்து சோதனையிட்டனர். அந்த லாரியில் 460 மூட்டைகளில் 23 டன் ரேஷன் அரிசி இருந்தது. அரிசியுடன் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவத்தில் தொடர் புடைய வேப்பூர் வட்டம் மங்களூரைச் சேர்ந்த ரஞ்சித் (25), வேல்முருகன் (30) மற்றும் லாரியின் உரிமையாளரான வேலூர் மாவட்டம் அரியூர்குப்பத்தைச் சேர்ந்த ம.ராமச்சந்திரன் (51) உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தொடர்ந்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுவரும் ரஞ்சித், வேல்முருகன்,ராமச்சந்திரன் ஆகியோரின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக, அவர்களை கள்ளச் சந்தையர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன், 3 பேரையும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் 3 பேரையும் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் அதிகபட்சம் 6 மாதம் வரையில் சிறையில் வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.