நாகப்பட்டினம்: இலங்கைக்கு கடத்துவதற்காக கார்களில் கொண்டு வந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சாவை நாகையில் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்து, 9 பேரை கைது செய்தனர். மேலும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வரஉள்ளதாகவும், அதை வேட்டைக்காரனிருப்பு புதுப்பள்ளி பாலம்அருகில் பெற்று, பின்னர் இலங்கைக்கு கடத்த இருப்பதாகவும் நாகை மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நாகை மாவட்ட எஸ்பி ஜவஹர் உத்தரவின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் மாலை வேட்டைக்காரனிருப்பு புதுப்பள்ளி பாலம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பாலம் அருகில் சுதாகர் உட்பட 3 பேர் காத்திருந்தனர். அவர்களை 2 கார்களில் வந்த 6 பேர் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை, தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து 2 கார்களையும் சோதனை செய்தபோது, அதில்170 கிலோ எடையுள்ள 85 கஞ்சாபொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.50 லட்சமாகும்.
பின்னர், கஞ்சா பொட்டலங்களையும், 2 கார்களையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுதாகர் (40), வேட்டைக்காரனிருப்பு கண்டியன்காடு பகுதியைச் சேர்ந்தபிரபாகரன் (35), வேட்டைக்காரனிருப்பு நாட்டாள்காடு பகுதியைச் சேர்ந்த சுதன்ராஜ் (27) மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 பேர், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 4 பேர் என 9 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து எஸ்பி ஜவகர் கூறும்போது, ‘‘கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.