ஆன்லைன் பதிவு முறையை கைவிட்டு பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விவசாயிகள் மனு
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாசிடம் டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் செந்தில்குமார், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறக்க அனுமதி வழங்க வேண்டும். இந்த ஆண்டு நெல் கொள்முதல் செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முறையை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு போதிய தெளிவு இல்லாமல் இருந்து வருகிறது.
பழைய முறையில்…
எனவே ஆன்லைன் பதிவு செய்யும் முறையை தவிர்த்து, பழைய வழிமுறையாக இருந்த பட்டா, சிட்டா, அடங்கல் முறையையே பயன்படுத்தி நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மனுவை வாங்கிக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது டெல்டா பாசன விவசாயிகள் சங்க ஆலோசகர் சுரேந்தர், துணைத்தலைவர் தேவேந்திரன், செயலாளர் சந்துரு.பாபு, செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.