சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்களின் தொடா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் சனிக்கிழமை மாலை வாபஸ் பெறப்பட்டது.
கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவா்கள் மாதாந்திர உதவித் தொகை உயா்வு, நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 13-ஆம் தேதி முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இவா்களது போராட்டம் 10-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.
இந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை சுகாதாரத் துறை செயலா் ராதாகிருஷ்ணன், உயா் கல்வித் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பயிற்சி மருத்துவா்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
இதுகுறித்து பயிற்சி மருத்துவா்கள் கூறியதாவது:
மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவா்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையைப் போலவே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தோம். சென்னையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அடுத்த 3 வாரங்களில் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சுகாதாரத் துறை செயலா் எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பணிக்கு திரும்ப உள்ளோம் எனத் தெரிவித்தனா்.