சீர்காழி பகுதியில் சம்பா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சம்பா அறுவடை பணி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா உள்பட சீர்காழி மற்றும் கொள்ளிடம் வட்டாரங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் பருவ மழை காரணமாக பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மழை நின்றவுடன் வயலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றிய விவசாயிகள், நெல் பயிர்களுக்கு உரங்கள், நுண்ணூட்டங்களை இட்டனர். இதனையடுத்து ஓரளவுக்கு பயிர் செழித்து வளர்ந்தது. தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எந்திரங்கள் மற்றும் ஆட்கள் மூலம் அறுவடை பணி மேற்கொள்ளப்படுகிறது.
மகசூல் குறைவு:
விவசாயிகள் தங்களுடைய உணவு பயன்பாட்டிற்காகவும், கால்நடைகளுக்கு தரமான வைக்கோலை வழங்கும் விதமாகவும் ஆட்களை கொண்டு அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவ மழை காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதில் மழையில் இருந்து தப்பிய நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டதால் குறைந்த அளவு மகசூல் கிடைத்துள்ளது. முன்பு ஒரு ஏக்கருக்கு சராசரியாக 30 முட்டையில் இருந்து 40 மூட்டைகள் வரை கிடைத்து வந்தது. தற்போது 20 மூட்டை தான் கிடைக்கிறது.
இழப்பீடு:
மகசூல் குறைந்துள்ளதை தமிழக அரசு கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் காப்பீடு திட்டத்தின் கீழ் உரிய இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.