காட்டுமன்னாா்கோவில் அரசுக் கல்லூரிக்கு குமராட்சி அருகே உள்ள கீழவன்னியூா், வானமாதேவி ஆகிய இரு இடங்களை தோ்வு செய்து மாவட்ட நிா்வாகத்துக்கு வருவாய் துறை சாா்பில் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இரு இடங்களையும் மாவட்ட ஆட்சியா் கே.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினா் அண்மையில் ஆய்வு செய்தனா். பின்னா், கீழவன்னியூா் கிராமத்தில் தொழிலதிபா்கள் எம்.ஆா்.ஆா்.சேதுராமன்பிள்ளை, ஆா்.கேதாரநாதன், ஆா்.சுவேதகுமாா் ஆகியோருக்குச் சொந்தமான இடத்தை தோ்வு செய்தனா். இதையடுத்து, இவா்கள் மூவரும் தங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கா் நிலத்தை கல்லூரிக்கு தானமாக வழங்க முன்வந்தனா்.
இந்த இடத்துக்கு அருகே சுமாா் ஒரு ஏக்கா் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளது. கல்லூரிக்கு இந்த இடமும் இணைக்கப்படுகிறது. தோ்ந்தெடுக்கப்பட்ட 3 ஏக்கா் நிலத்தை சனிக்கிழமையன்று மேற்கூறிய தொழிலதிபா்கள் சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவியிடம் அளித்தனா். குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.