“மைசூர் மன்னர் ஹைதர் அலியின் தலைமையில் 100 பீரங்கிகள், 80 ஆயிரம் வீரர்களுடன் 1780 முதல் 1784 வரை இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் நடைபெற்ற காலத்தில், 1781ஆம் ஆண்டு ஜூலை 1இல் மைசூர் பேரரசுக்கும், இங்கிலாந்து படைகளுக்கும் இடையே பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது போர்டோ நோவா போர் (Battle of Porto Novo).
பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற போர் நினைவாக வெள்ளாற்றின் அருகில் நினைவுக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் செய்வதற்கு முன் ஹைதர் அலி, தன் படையினருடன் தொழுகை நடத்திய ஈத்கா மற்றும் கோரி தோட்டம் என்ற இடமும் உள்ளது.
அவை போதிய விழிப்புணர்வும், பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் இல்லாமல் தொடர்ந்து சேதமடைந்து கொண்டிருக்கின்றன. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் அவை முற்றிலுமாய் அழிந்து போகும் அபாயம் உள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட முக்கிய பகுதி இது. இதற்கான வரலாற்றுச் சான்றுகள் நிரம்பிய பகுதியாக உள்ளன.
வீர வரலாறுகள் நிரம்பிய இப்பகுதியில், தொல்லியல் துறையும், அரசும் வரலாற்றுச் சுவடுகளை கண்டு கொள்ளாததால், காலப்போக்கில், மதிப்பு மிகுந்த இந்த இடங்கள் மாயமாகிக் கொண்டுள்ளன. இங்கு தற்போது பெயர்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன.
வெள்ளையர்களை எதிர்த்து போராடிய மன்னர்களது இடங்களை பராமரிக்கவும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைய தலைமுறைக்கு பழைய வரலாற்றை உணர்த்தும் வகையிலுள்ள வகையில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது” என சமூக ஆர்வலர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கையை அனுப்பி வைத்தார்.
அதற்கு, கடலூர் மாவட்ட சுற்றுலா & கலாச்சாரத் துறை (தொல்லியல் பிரிவு) அதிகாரி, “ஏற்றக்கப்பட்டது, மேற்படி மனுதாரர் ஹைதர் அலி ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் செய்வதற்கு முன், தன் படையினருடன் தொழுகை நடத்திய ஈத்கா மற்றும் கோரி தோட்டம் என்ற இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க கோரியது, மேற்படி இடத்தினை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க இத்துறையின் தொல்லியல் அலுவலர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். மேலும், இவ்விரம் இத்துறையின் ந.க.எண்.இ3/4435/21 நாள். 22/9/2021 ன்படி மனுதாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. எனவே, இதனை முற்றாக்கலாம் என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என பதில் தந்துள்ளார்.
எனவே, விரைவில் பரங்கிப்பேட்டையில் ஹைதர் அலீ அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
செய்தி: பாலாஜி, சிதம்பரம்