தமிழகத்தில் மும்மொழி கல்வி திட்டத்தை அமுல்படுத்தக்கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பில்
அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் சீர்காழியில் நடைபெற்றது.
தலைமை தபால்நிலையத்தின் மூலமாக அஞ்சல் அட்டைகள் தமிழக முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டத் தலைவர் இரா.மணிகண்டன், மாவட்ட அமைப்பாளர் க.பாலாஜி, மாவட்ட செயலாளர் இராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் நீ. தனசேகரன், மாவட்ட துணைசெயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடித விபரம்.:
பாரத நாடு முழுவதும் மும்மொழிக் கல்வித்திட்டம் நடைமுறையில் உள்ளது. அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி, இந்தி மொழி, ஆங்கில மொழி என மூன்று மொழிகளை கற்கின்றனர். தமிழகத்தில் மட்டும் இந்தி மொழி வெறுப்புணர்வு உள்ளவர்களின் அரசியல் ஆதிக்கம் காரணமாக இருமொழிக் கல்விக் கொள்கை நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசின் கல்வி நிலையங்களில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் விரும்பினாலும் இந்தி படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
வசதி வாய்ப்புள்ளவர்களும், இந்தி மொழி வெறுப்புணர்வு போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்பத்தாரும் இந்தி மொழியை படித்து கல்வி, வேலை வாய்ப்புக்களில் முன்னேறியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. மேலும் முஸ்லீம்கள் உருது மொழி படிக்க விரும்பினால் தமிழக அரசு அதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருகின்றது. ஆனால் இந்தி படிக்க விரும்பினால் கூட கல்வித்துறை தடை செய்கின்றது. இதன் காரணமாக தமிழக மாணவர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் இருமொழிக் கல்விக் கொள்கை காரணமாக நவோதய பள்ளிகள் மற்றும் மத்திய அரசு நடத்தும் பள்ளிக் கூடங்கள் இதற்கான நிதி ஆகியவை தமிழகத்திற்கு வருவது இல்லை. இதன் காரணமாக தமிழக மாணவர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். எனவே இருமொழிக்கல்விக் கொள்கையை கைவிட்டு உடனடியாக மும்மொழிக்கல்விக் கொள்கையை அமுல்படுத்த வேண்டுகிறோம்.
மேலும் தமிழகத்தில் ஆரம்பக் கல்வியை தமிழ்வழிக் கல்வியாக மட்டுமே அமுல்படுத்த வேண்டுகிறோம். உயர்கல்வியை தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டுகிறோம். இந்திமொழி வெறுப்புணர்வு கொள்கைகளை கைவிட்டு ஏழை எளிய மாணவர்கள் பயனடையும் வகையில் மும்மொழிக் கல்விக் கொள்கையை உடனே அமுல்படுத்த வேண்டுகிறோம்.
என குறிப்புட்டுள்ளனர்.
செய்தி: சுவாமி