தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப். 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
JUSTIN | 31,029 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்; மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் – மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து பல நாட்கள் ஆன நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் விடுபட்ட மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
ஜனவரி 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படுவதாகவும், பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். அதேபோல பிப். 5ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை எனவும், பிப். 7ம் தேதி மனுவை வாபஸ் பெற இறுதி நாள் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதி நடைபெறம் என்றும் அறிவித்துள்ளார்.
பின்னணி:
முன்னதாக தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த செப்.15-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் தேர்தல் நடத்த கூடுதலாக 7 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணையில், சட்டப் பேரவை தேர்தல் தடையின்றி நடக்கும்போது ஏன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என கேள்வியெழுப்பியிருந்தது. இதனையடுத்து தேர்தல் நடத்த 2022 ஏப்ரல் வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
இதற்கான காலக்கெடு ஜன.27ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 4 மாத காலம் அவகாசம் கோரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் இதற்கு அனுமதி மறுத்து கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் நடத்த அறிவுறுத்தியது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்.19ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் வாக்குப்பதிவு நடைபெறும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.