கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 70 ஆயிரத்து 445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 459 பேருக்கு பாதிப்பு உறுதி யானது. இவர்களில் சென்னையில் இருந்து விருத்தாசலம், புவனகிரி வந்த 2 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து கடலூர் வந்த ஒருவருக்கும் பாதிப்பு உறுதியானது.
நோய் தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 151 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்பட 4 போலீசார் என 305 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்து 904 ஆக உயர்ந்தது.
கட்டுப்பாட்டு பகுதி
நேற்று முன்தினம் வரை 66 ஆயிரத்து 263 பேர் குணமடைந்து சென்ற நிலையில், நேற்று 411 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனாவுக்கு இது வரை 883 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதித்த 2 ஆயிரத்து 935 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 412 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதி 24-ல் இருந்து 22 ஆக குறைந்தது.