கடலூர் மாவட்டம், முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன் என்பவரது மகன் அஸ்வந்த் (வயது 4). அஸ்வந்த் கீழக்கொல்லை கோயில் தெருவில், வீட்டின் முன்பு நேற்று மாலை 3 மணி அளவில் விளையாட சென்றிருக்கிறார். அதன்பின் சிறிது நேரத்தில் சிறுவன் அஸ்வந்த் காணாமல் போயுள்ளார். அருகில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்திருக்கின்றனர் அஸ்வந்த்தின் பெற்றோர்.
இதற்கிடையில் சிறுவன் அஸ்வந்த், மர்மமான முறையில் அருகிலுள்ள முந்திரி தோப்பில் உடலில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள், சிறுவனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை #8211; கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கீழக்கொல்லை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் சிறுவன் மரணம் குறித்து சந்தேகத்தின்பேரில் பக்கத்து வீட்டு பெண் ரஞ்சிதா (வயது 21) என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்தான் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அஸ்வந்தை அழைத்து சென்றார் என்பது உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது ரஞ்சிதா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.