0 0
Read Time:2 Minute, 31 Second

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காந்தியடிகளின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் துரைமுருகன், பழனிவேல் தியாகராஜன், சேகர் பாபு, அரசு அதிகாரிகள், தலைமை செயலக பணியாளர்கள் என பலரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் தீண்டாமை உறுதிமொழியை வாசித்த முதலமைச்சர், “இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் / குடிமக்கள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக்கொண்டு, எவர்மீதும் தெரிந்தே, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று உளமார உறுதியளிக்கிறேன்.

அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் உளமாற உறுதியளிக்கிறேன்” என கூறினார். இதனையடுத்து சென்னை தலைமைச் செயலக அரசு ஊழியர்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றே உறுதிமொழி ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %