0 0
Read Time:4 Minute, 36 Second

சேத்தியாத்தோப்பு அருகே குடும்ப கட்டுப்பாடு செய்ய வந்த பெண் இறந்த சம்பவத்தில் டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த கூளாப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருடைய மனைவி விஜயலட்சுமி(வயது 30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று விஜயலட்சுமி குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அப்போது அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் திடீரென சுய நினைவை இழந்த விஜயலட்சுமியை, மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு டாக்டர் அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவுக்கரசு கொடுத்த புகாரின்பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் விஜயலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் இறந்த வியலட்சுமியின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அறவாழி, ஒன்றிய செயலாளர்கள் சாரதி.ரஜினி. மாநிலத் துணைச் செயலாளர் கருணாகரன். மாவட்ட துணை செயலாளர் செல்வமணி உள்ளிட்ட கட்சியினர் நேற்று காலை ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஒன்று திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரத்தூர் அரசு டாக்டர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விஜயலட்சுமி இறப்பு குறித்து தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும், இறந்த ஜெயலட்சுமி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோரிக்கை மனு

இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, சிதம்பரம் தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மனு கொடுங்கள், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்ற உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ. ஆறுதல்

இதற்கிடையே இதுபற்றி அறிந்த புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன், பேரவை செயலாளர்கள் கானூர்.பாலசுந்தரம். உமாமகேஸ்வரன், ஒன்றிய செயலாளர் கருப்பன் ஆகியோர் இறந்த விஜயலட்சுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %