தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது.
தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பாஜக – அதிமுக கட்சிகளுக்கு இடையே இடப்பங்கீடு குறித்து விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
கடலூர், விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர்.
இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகள், சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள், விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகள், திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 29 வார்டுகள், பண்ருட்டி நகராட்சியில் 30 வார்டுகள், விருதாசலம் நகராட்சியில் 33 வார்டுகள், தருமபுரி நகராட்சியில் 31 வார்டுகள், திட்டக்குடி நகராட்சியில் 24 வார்டுகள் என இவற்றில் உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும்
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.