ஆட்டோ திருட்டு:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி அருணகிரிநாதர் தெருவை சேர்ந்தவர் முத்தலிப். ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 14-ந் தேதி இரவு தனது ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தி விட்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது ஆட்டோவை காணாது முத்தலிப் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து முத்தலிப், குத்தாலம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை போலீசார் இளையராஜா ஆத்மநாதன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனைதொடர்ந்து திருடுபோன பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து ஆட்டோவை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
2 பேர் கைது:
அதில் திருவாரூர் மாவட்டம் கொடிக்காள்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த மைதீன் பிச்சை மகன் ஷேக் அலாவுதீன் (வயது 31), நாகை மாவட்டம் நன்னிலம் தாலுகா ஆதலையூர் மவுலானா தெருவை சேர்ந்த பஷீர்அகமது மகன் முகமது சித்திக் (31) ஆகியோர் ஆட்டோவை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், ஷேக் அலாவுதீன், முகமது சித்திக் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஆட்டோவை திருடியதும், அந்த ஆட்டோவை திருச்சியில் உள்ள ஒரு நபரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேக் அலாவுதீன், முகமது சித்திக் ஆகிய 2 பேரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.