தமிழகத்தில் காலியாக உள்ள 12,838 பதவிகளுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக வெகு சிலர் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு 4,805 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,646 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேபோல் 7,621 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று ஒரே நாளில் 13,914 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தமாக 37 ஆயிரத்து 518 பேர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான வேட்பாளர்கள் மேளதாளங்கள் முழங்க வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இதனையொட்டி ஏராளமான வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமில்லாமல் சுயேச்சை வேட்பாளர்களும் ஆர்வத்துடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் சிலர் மேளதாளங்கள் முழங்க மண்டல அலுவலகங்களுக்கு வருகைதந்தனர்.
நாகை நகராட்சியில், தாரை தப்பட்டைகளுடன் குத்தாட்டம் போட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விஜய் மக்கள் இயக்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கரூர் மாநகராட்சி 36வது வார்டில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளரான ரேணுகா, தனது எட்டு மாத கைக்குழந்தையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது, குழந்தைகளை கூட்டி வரக் கூடாது என தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி எச்சரித்ததையடுத்து குழந்தையை தனது கணவரிடம் கொடுத்துவிட்டு ரேணுகா வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், BAND வாத்தியங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து சிலம்பாட்டம், புலி ஆட்டம் என ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல ஆங்காங்கே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
Source:N18