கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கீழக்கல்பூண்டியை சேர்ந்தவர் இப்ராகிம்(வயது 47). இவர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி, அதனை சிறிய பொட்டலமாக்கி அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதாக போலீஸ் நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு தலைமையில் தலைமை காவலர்கள் பத்மநாதன், சிவசுப்பிரமணியன், காவலர் ராஜசேகர் ஆகியோர் நேற்று மாலை இப்ராகிம்மின் வீட்டு அருகில் உள்ள குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.
25 டன் புகையிலை பொருட்கள்
அங்கு குவியல், குவியலாக புகையிலை பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்ததையும், சிறிய, சிறிய பொட்டலங்களில் புகையிலை பொருட்கள் அடைத்து இருந்ததையும் கண்டு மலைத்துப்போய் நின்றனர். அதில் மொத்தம் 25 டன் புகையிலை பொருட்கள் இருந்தன.
இப்ராகிம், அந்த குடோனை புகையிலை தயாரிக்கும் தொழிற்சாலை போன்று நடத்தி வந்துள்ளார். இதையடுத்து 25 டன் புகையிலை பொருட்களையும் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இந்த புகையிலை பொருட்களை ஆராய கடலூரில் இருந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் வந்தனர். அவர்கள் அந்த புகையிலை பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இதனிடையே இது பற்றி அறிந்ததும் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா, ராமநத்தம் இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.