0 0
Read Time:5 Minute, 43 Second

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவோடு, நல்ல தூக்கமும் அவசியம். தூக்கமின்மையால் ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. போதுமான தூக்கத்தைப் பெறுவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. தூக்கமின்மையால் பல வகையான நோய்கள் ஏற்படக்கூடும். அதே வேளையில், போதுமான தூக்கம் கிடைக்காத போது உடல் சோர்வடைகிறது. ஆயுர்வேதத்தில், தூக்கம் மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒருவர் 7-8 மணிநேரம் தூங்குவது மிகவும் முக்கியம்.

சிலர் படுக்கையில் படுத்ததுமே தூங்கிவிடுவார்கள். அதே வேளையில், சிலர் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள் அல்லது இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுப்பார்கள். ஒருவருக்கு தூக்கம் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல கடுமையான நோய்களினாலும் தூக்கம் வராமல் கஷ்டப்படக்கூடும். எனவே நீண்ட நாட்களாக சரியான தூக்கத்தைப் பெறாமல் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதோடு வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை செய்ய வேண்டும். இது தவிர, பின்வரும் ஒருசில உணவுகளை சாப்பிடுவதால், இரவு நல்ல நிம்மதியான தூக்கம் வரும். இப்போது அந்த உணவுகள் என்னவென்பதைக் காண்போம்.

பாதாம்

பாதாமில் மெலடோனின் உள்ளது. இது நல்ல தூக்கத்தைத் தூண்டக்கூடியது. மேலும் டயட்டில் இருப்பவர்களுக்கும் பாதாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவர் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் 3-5 பாதாமை சாப்பிட்டால், அது இரவு நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வைக்கும்.

சூடான பால்

இரவு உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு சூடான பால் குடிக்க வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் அதிக காரமான உணவுகளை உண்ணக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டு, இரவு தூக்கம் இதனாலேயே பாழாகும்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. உண்மையில், சீமைச்சாமந்தி டீ தூக்கமின்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு இரவு நேரத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால், அப்போது ஒரு கப் சூடான சீமைச்சாமந்தி டீ குடியுங்கள். இதனால் இரவு நன்றாக தூக்கம் வரும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் செரடோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது. உடலில் செரடோனின் அளவு அதிகரித்தால், அது மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். மேலும் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், அது இரவு நல்ல தூக்கத்தைப் பெற உதவுவது மட்டுமல்லாமல், இனிப்பு உணவுகளின் மீதான ஏக்கத்தையும் குறைக்கும்.

சாதம்

பல நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் அரிசி சாதம் பிரதான உணவாக உண்ணப்படுகிறது. அரிசி சாதத்தை அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. ஆனால் அரிசி சாதத்தை சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும். ஆய்வின் படி, தினமும் படுக்கைக்கு ஒரு மணிநேரத்திற்கு முன் அரிசி சாதத்தை சாப்பிடுவது இரவு நேரத் தூக்கத்தை மேம்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே நீங்கள் இரவு தூக்கம் வராமல் அவதிப்பட்டால், அரிசி சாதத்தை சாப்பிட்டுப் பாருங்கள்.

வான்கோழி

உங்களுக்கு இரவு தூக்கம் வரவில்லை என்றால், இரவு உணவாக வான்கோழி சாப்பிடுங்கள். இதில் உள்ள ட்ரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம், மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் வான்கோழியில் உள்ள புரோட்டீன், உடல் சோர்வைத் தூண்டிவிடும். ஆகவே இதை இரவு உணவாக உட்கொண்டால், இரவு நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

கிவி

கிவி பழம் கலோரி குறைவான மற்றும் அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழம். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், இது நல்ல தூக்கத்தைப் பெற உதவும் பழங்களுள் ஒன்று. ஏனெனில் இதில் செரடோனின் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இரவு நேரத்தில் ஒரு கிவி பழத்தை சாப்பிட, இரவு நன்கு தூக்கம் வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %