48 மணி நேரத்தில் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் தொடங்கவுள்ள நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐந்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.
உத்தரப்பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலானது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையானது மார்ச் 10ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் வாக்கு பதிவு இன்னும் 48 மணி நேரத்திற்குள்ளாக துவங்கவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான தங்களது வாக்குறிதிகளை பாஜக மூத்த தலைவர் அமித் ஷா இன்று வெளியிட்டார். அதில் இருக்கும் முக்கிய அம்சங்களானவை,
விவசாயிகளுக்கு பாசனத்திற்காக இலவச மின்சாரம் வழங்கப்படும்.
அனைத்து குடும்பத்திலும் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக 2 கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 60 வயது தாண்டிய பெண்களுக்கு பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசம்.
கல்லூரி பயிலும் மாணவிகள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
லவ் ஜிகாத் சர்ச்சையில் முக்கிய குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
முதியோர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையானது 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஆகிய அறிவிப்புகள் அடங்கிய தேர்தல் வாக்குறிதியை அமித் ஷா வெளியிட்டார்.