“பிகினியோ, முக்காடோ, ஹிஜாபோ எதை அணிவது என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உரிமை” என பிரியங்கா காந்தி டிவிட்டரில் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உடுப்பியில் உள்ள பல்கலைக்கழக அரசு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப்பை எடுத்துவிட்டு வகுப்பறைக்குள் அமர வேண்டும் என நிர்வாகம் திடிரென பிறப்பித்த புதிய உத்தரவை மாணவிகள் நிராகரித்தனர்.
மாணவிகளின் மறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து வகுப்பறைக்குள் வந்தனர். இது அடுத்தடுத்து மிகப்பெரிய போராட்டமாக உருவானது. இந்நிலையில், நேற்று இரு தரப்பு மாணவர்களுக்குமிடையே மோதல் உருவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்கள் வீசி தாக்கிக்கொண்டனர்.
இதன் காரணமாக தாவணகெரே மாவட்டம் ஹரிகரா, சிவமொக்கா மாவட்டத்தில் சிவமொக்கா நகர், சிகாரிப்புரா, உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா, மணிப்பால் ஆகிய பகுதிகளில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாணவிகளுக்கு ஆதரவாகும், எதிரப்பாகவும் பலர் தங்கள் கருத்துக்களை பகிர தொடங்கினர்.
இந்நிலையில், “பிகினியோ, முக்காடோ, ஜீன்ஸோ அல்லது ஹிஜாபோ எதை அணிவது என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உரிமை” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.