0 0
Read Time:3 Minute, 50 Second

ஆய்வுக்கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகளான வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் போது தனி மனித இடைவெளி, முக கவசம் அணிதல் மற்றும் இதர கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். சாலை வழியாக ஊர்வலங்கள், சைக்கிள் பேரணி மற்றும் பாத யாத்திரைகளுக்கு அனுமதி கிடையாது. திறந்தவெளி மற்றும் உள்அரங்கு கூட்டங்களுக்கு அதிகபட்சமாக ஆயிரம் நபர்கள் அல்லது அவ்விடத்தின் கொள்ளளவில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அடையாள அட்டை

மேலும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க, அதிகபட்சமாக 20 நபர்கள் வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளது (பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் தவிர), ஒலிபெருக்கி மற்றும் வாகன பிரசாரம் செய்வது தொடர்பாக காவல்துறை மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அனுமதி பெற வேண்டும். சுவரொட்டி மற்றும் பதாகைகள் வைக்க அனுமதி கிடையாது.
வேட்பாளர் அடையாள அட்டை, வேட்பாளரின் வாக்கு பதிவு முகவரி மற்றும் வாக்கு எண்ணுகை முகவர்களுக்கு அடையாள அட்டை தயார் செய்து வழங்குவதை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் உறுதி செய்திட வேண்டும். கொரோனா விதிமீறல்கள் கண்டறியப்படும் போது வேட்பாளர்கள் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

செலவின படிவம்

தேர்தல் முகவரை நியமிக்கும்போது மாநில அமைச்சர்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை முகவராக நியமனம் செய்திட அனுமதிக்கக்கூடாது. வேட்பாளர் செலவின படிவத்தினை வேட்பாளர்களுக்கு கட்டாயம் வழங்கப்படுவதை தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதி செய்திட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) டெய்சிகுமார், (வளர்ச்சி) மல்லிகா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %