சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் எடக்குடி வடபாதி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள காளிகாவல்புரம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக்கோரி நேற்று நாகப்பட்டினம் சாலை தென்னலக்குடி பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது எடகுடி வடபாதி ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க வேண்டும். வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகுபாடு இல்லாமல் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி தாசில்தார் சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், வைத்தீஸ்வரன் கோவில் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள் மணி ஆகியோர் அங்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் சீர்காழி- நாகப்பட்டினம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவெண்காடு
அதேபோல் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக்கோரி திருவெண்காடு அருகே திருவாலி கடைத்தெருவில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த திருவாலி ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி திருமாறன், திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கந்தவேல், ஒன்றிய பொறியாளர் சிவகுமார் ஆகியோர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் பூம்புகார்- சீர்காழி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.